ஏற்கெனவே வெள்ளித்திரையில் ஓடிக் கொண்டிருக்கும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியே இன்னமும் பேசி முடிக்கவில்லை. அதற்குள்ளாக அடுத்த ஊழல் லீலைகள் அம்பலமாகிவிட்டது..
இப்போதெல்லாம் இந்தியாவில் செய்யும் ஊழல்களின் மதிப்பு கோடி, ஆயிரக்கணக்கான கோடி, லட்சக்கணக்கான கோடி என்று சர்வசாதாரணமாகிவிட்டது. 2-ஜி-ஊழலை வெட்ட வெளிச்சமாக்கிய சி.ஏ.ஜி. என்றழைக்கப்படும் காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட் ஜெனரல் ஆஃப் இந்தியா என்ற அமைப்புதான் இந்த ஊழலையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
ஆனால் இந்தப் புகார் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே ஒரு முறை எழுந்து அமுங்கிப் போய்க் கிடந்தது. இப்போது 2-ஜி-யில் தி.மு.க.வை இந்தியாவே வறுத்து எடுத்துக் கொண்டிருக்கும்போது பிரதமரையும், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியையும் மட்டுமே குறிப்பெடுத்துத் தாக்குவதற்காக இந்த ஊழல் விஷயம் மீண்டும் விசுவரூபமெடுத்துள்ளது.
அதற்கேற்றாற்போல் 2-ஜி-யில் சற்று அடக்கி வாசித்து வரும் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவின் காம்பவுண்ட்டில் இருந்து வெளிவரும் பிஸினஸ்லைன் பத்திரிகைதான் இந்த ஊழல் பற்றிய செய்தியை இப்போது வெளிப்படையாக்கி இன்னொரு திசை திருப்பலை செய்திருக்கிறது. இந்த முறை மாட்டியிருப்பது சாட்சாத் அமைதியின் திருவுரும்.. நேர்மையின் சிகரம்.. நாணயத்தின் அடையாளமாகச் சொல்லப்படும் பிரதமர் மன்னமோகனசிங்குதான்.
அவருடைய நேரடி கண்காணிப்பின் கீழ் வரும் வி்ண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் நடந்திருக்கும் இந்த ஊழலையும் படித்துப் பார்த்தால் இந்தியாவில் ஊழலை வளர்த்துவிடுவதற்கு முழு காரணமும் அரசியல்வியாதிகள்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
தகவல் தொழில் நுட்பத் துறை இதுவரையில் 2-ஜி மற்றும் 3-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரங்களை மட்டுமே கையாண்டு வந்திருக்கிறது. பிரதமரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்திய விண்வெளித் துறையும் அதன் துணை அமைப்பான இந்திய விண்வெளித் துறை ஆய்வு மையம் ஆகியவையும் பொதுவாக கேபினட்டின் சக்திக்கு அப்பாற்பட்டு வெளியிலேயே செயல்படக் கூடியவையாக உள்ளன.
இந்த மெகா ஊழலில் என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், முதல் பிள்ளையார் சுழி 2005-ம் ஆண்டு இந்திய விண்வெளித்துறையின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரக்ஸுக்கும் தேவாஸ் மல்ட்டி மீடியா என்கின்ற ஒரு தனியார் கம்பெனிக்கும் இடையே போடப்பட்ட ஒரு ஒப்பந்தம்தான்.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரோ, தேவ்ஸ் மல்ட்டி மீடியாக கம்பெனிக்காக ஜி-சாட்-6, ஜி-சாட்-6-ஏ ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும். இதில் ஒரு சாட்டிலைட்டுக்கு தலா 10 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தி தேவாஸ் மல்ட்டி மீடியா பணம் சம்பாதித்துக் கொள்ளும். அத்துடன் 20 வருடங்களுக்கு எந்தவிதத் தடையுமில்லாமல் மிக விலையுயர்ந்த எஸ் பாண்ட்டின் 70 மெகா ஹெர்ட்ஸ் ஒளிக்கற்றை தேவாஸ் கம்பெனிக்கு இந்திய விண்வெளித் துறையால் தாரை வார்க்கப்படும்.
இந்த எஸ் பேண்ட்டை சர்வதேச தகவல் தொழில் நுட்பத் துறையில் 4-ஜி என அழைப்பார்கள். இதனைப் பயன்படுத்தி தொலைத்தொடர்புத் துறையின் நான்கு விதமான தளங்களிலும் இயங்க முடியுமாம்.
அதாவது லேண்ட்லைன் என அழைக்கப்படும் வீட்டில் உள்ள சாதாரண தொலைபேசி, 2-ஜி எனப்படும் செல்லூலர் தொலைபேசி, 3-ஜயில் வரக்கூடிய குரல் மற்றும் இண்டர்நெட் வசதி, நான்காவதாக செயற்கைக்கோள் மூலம் டவரே இல்லாமல் எல்லா இடத்திலும் பயன்படுத்தக் கூடிய வசதி. இதுதான் இந்த 4-ஜி என்கிறார்கள்.
இந்த ஒளிக்கற்றை இந்தியாவில் 190 மெகா ஹெர்ட்ஸாக இருக்கிறது. இந்த 190 மெகா ஹெர்ட்ஸில் 150 மெகா ஹெர்ட்ஸை விண்வெளி்த் துறையின் பயன்பாட்டில் செயற்கைக் கோள் வசதிக்காகவும், மொபைல் வசதிகளை உருவாக்குவதற்காகவும் மத்திய அரசு அளித்திருக்கிறது.
இதே பேண்ட்டில் உள்ள 20 மெகா ஹெர்ட்ஸை சென்ற ஆண்டு மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூபாய் 12847 கோடி ரூபாய்க்கு அளித்தது. ஆனால் இதே பேண்ட்டில் இருக்கும் 70 மெகா ஹெர்ட்ஸ் அளவுள்ள அலைக்கற்றையை வெறும் 1000 கோடி ரூபாய்க்கு தேவாஸ் நிறுவனத்திற்கு விண்வெளித்துறை அளித்துள்ளது.
சி.ஏ.ஜி.யின் கணக்குப்படி இதன் உண்மையான மார்க்கெட் விலை குறைந்தபட்சம் 2 லட்சம் கோடியாக இருக்கும் என்பதுதான் இதில் இருக்கும் முக்கியக் குற்றச்சாட்டு.
இந்தப் பேரத்திற்காக தகவல் தொழில் நுட்பத் துறை மூலமாக உள்ளே நுழையாமல் விண்வெளித்துறை வழியாக, பின் வழியாக நுழைந்து தனது வியாபாரத்தை முடித்திருக்கிறது தேவாஸ் நிறுவனம்.
இந்த தேவாஸ் கம்பெனியின் உரிமையாளர் பெயர் எம்.ஜி.சந்திரசேகர். இவர் இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி. 2004-ல் இவர் ஓய்வு பெற்ற பின்புதான் இந்த நிறுவனத்தையே துவக்கியுள்ளார்.
இவருடைய கம்பெனியில் புகழ் பெற்ற ஜெர்மன் தொலைத் தொடர்பு நிறுவனமான டாயிஸ் டெலிகாம் 17 சதவிகித பங்குகளைப் பெற்றுள்ளது. அதுவும் இஸ்ரோவுக்கும், தேவாஸ் நிறுவனத்துக்குமான ஒப்பந்தம் நிறைவேறிய பின்புதான்..
இந்த இஸ்ரோவின் முன்னாள் அதிகாரியுடன் பணியாற்றிய இந்நாள் அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து சட்டத்திற்குப் புறம்பாக தொலைத் தொடர்புத் துறையில் தங்களுக்கான பெரிய இடத்தைப் பெறுவதற்காக இந்தக் கம்பெனியை உருவாக்கி, அதனுடன் இது போன்ற ஒப்பந்தத்தை(20 வருடங்களுக்கு 70 மெகா ஹெர்ட்ஸ் எஸ் பேண்ட், வெறும் 1000 கோடி ரூபாய்களுக்கு) செய்து கொண்டனர் என்பதும் சி.ஏ.ஜி.யின் மற்றொரு குற்றச்சாட்டு..
இதில் சி.ஏ.ஜி. சுத்தும் குற்றச்சாட்டுக்களைப் படித்துப் பார்த்தால் நமக்குத்தான் தலை சுற்றுகிறது.
1. எஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரம் தேவாஸூக்கு அளிக்கப்படுவதற்கு முன்பு ஒரு போட்டி ஏலதாரர்கூட அழைக்கப்படவில்லை..
இது எவ்வளவு பெரிய முறைகேடு..? சாலைகளில் ஜல்லி போட்டு சமன் செய்யும் சிறிய வேலைகளுக்குக்கூட ஏலம் முறையைப் பின்பற்ற வேண்டும் என்கிற விதிமுறைகள் இருக்கின்றபோது இவ்வளவு பெரிய வியாபாரத்தை செய்கின்றபோது ஏலத்திற்கே விடாமல் தாங்கள் விரும்பியவர்களுக்குக் கொடுத்தால் இதில் உள்ளடி அரசியலும், ஊழலும் இல்லாமலா இருக்கும்..?
2. குறித்த காலத்திற்குள் செயற்கைக் கோளை செலுத்தாவிட்டால் இந்திய விண்வெளித்துறை ஐரோப்பிய விண்வெளித் துறை மூலம் செயற்கைக் கோளை செலுத்தி தேவாஸுக்கு நஷ்டம் ஏற்பாடதவகையில் பார்த்துக் கொள்ளும் என்ற பெனால்டி விதிமுறையும் இதில் இருக்கிறது.
ஆஹா.. இந்த பாலிஸி நல்லாயிருக்கே. பொதுமக்கள் பணம் நஷ்டமானாலும் பரவாயில்லை. நாமும், நமது குடும்பமும் கஷ்டப்படக் கூடாது என்கிற நமது சராசரி அரசியல்வியாதிகளின் புத்தி இந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது என்பது நம்மை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் செய்தி..
3. ஜி-சாட்-6-ஐ இதுவரை ஏவ முடியாத இஸ்ரோ, ஏற்கெனவே ஏரியன்ஸ் ஸ்பேஸ் என்கிற ஐரோப்பிய விண்வெளி ஏவுவதற்குத் தயாராகி வருகிறது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்ரோவே செயற்கைக்கோளை ஏவினால் அதற்கு லாபம். இதை ஐரோப்பிய நிறுவனம் மூலம் ஏவினால் எடுத்தவுடனேயே 2400 கோடி ரூபாய் நட்டம் வந்துவிடுகிறது. தேவாஸுக்கு நட்டம் வர வேண்டாம் என்பதற்காகவே இஸ்ரோ நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை என்பதுபோல் இந்த ஒப்பந்தம் இருப்பதை சி.ஏ.ஜி. சுட்டிக் காட்டுகிறது.
ஆமாம். வேறு எதை இந்த நிபந்தனை காட்டுகிறது. ஒரு தனி நபருக்காக இஸ்ரோ என்னும் விண்வெளிக் கழகமே வளைந்து கொடுத்திருக்கிறது என்றால் பணம் எந்த அளவுக்கு பாய்ந்திருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது..!
4. இஸ்ரோ அமைப்புக்குள் இருக்கக்கூடிய ஒப்பந்த முறைகள் எதுவும் தேவாஸூடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பின்பற்றப்படவில்லை. பிரதமர், மத்திய அமைச்சரவை மற்றும் இந்திய விண்வெளி கமிஷன் ஆகிய மூவருக்கும் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி எவ்வித முறையான தாக்கீதுகளும் செல்லவில்லை.
சபாஷ்.. இதுவும் ஸ்பெக்ட்ரம் போலவேதான். பிரதமரின் டேபிளுக்கே போகவில்லை. எல்லாத்தையும் நாங்கதான் செஞ்சோம் என்று முதலிலும், மாட்டியவுடன் எல்லாத்தையும் அந்த சிங்குகிட்ட சொல்லிட்டு்ததான் செஞ்சேன் என்று மாற்றிப் பேசியும் கவிழ்த்ததைப் போல இதையும் இப்போது மாற்றித்தான் பேசப் போகிறார்கள்.
பிரதமருக்கே இது தெரியாது எனில் நமது அரசியல் நிர்வாக அமைப்பே கேவலமாக இருக்கிறது என்றுதான் பொருள். பின்பு எதற்கு இந்த மனிதர் பிரதமர் என்ற பதவியில் இன்னமும் வெட்கமில்லாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறாராம்..?
5. இதுவரை இந்திய விண்வெளித் துறை தயாரித்து வந்த அனைத்து செயற்கைக் கோள்களும் மல்ட்டி பர்போஸ் என்றழைக்கப்படும் பல்வேறு பயன்பாடுகளுக்கான செயற்கைக் கோள்கள்தான். ஆனால் தேவாஸுக்காக அவர்களது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மட்டுமே 2 செயற்கைக் கோள்களை உருவாக்கியிருப்பது நடைமுறையில் இதுவரை இல்லாத நிகழ்வு என்பது மட்டுமில்லாமல், பொது பயன்பாட்டுக்கு உருவாகக் கூடிய ஒரு செயற்கைக் கோளை இந்திய மக்கள் இழந்துவிட்டனர்.
வெரிகுட்.. முழுக்க நனைஞ்சாச்சு.. முக்காடு எதுக்கு என்றுதான் இதற்கும் துணிந்திருக்கிறார்கள்..!
6. எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக இதுவரையில் தேவாஸ் மல்ட்டி மீடியா நிறுவனம் தகவல் தொடர்புத் துறையிடமிருந்து எந்தவிதமான லைசென்ஸையும் பெறவில்லை. லைசென்ஸ் பெறுவதற்கு முன்பு ஸ்பெக்ட்ரம் உறுதி செய்யப்பட்ட உலகத்தின் முதல் கம்பெனியாக தேவாஸ் கம்பெனி இருக்கிறது என்பதுதான் மிகப் பெரிய குற்றச்சாட்டு.
அப்பாடா.. ஊழலுக்கான ஊற்றுக் கண்ணே இங்கேதான் சிக்கியுள்ளது. இப்படி லைசென்ஸே கொடுக்கப்படாத ஒரு நிறுவனத்திற்கு நாட்டின் மிகப் பெரிய சொத்தையே தூக்கிக் கொடுக்கும் அளவுக்குத்தான் நமது மத்திய அரசின் நிர்வாகத் திறன் இருக்கிறது என்றால் இவர்களையெல்லாம் நாம் தலைமை தாங்க வைத்திருப்பதற்கு நாம்தான் வெட்கப்பட வேண்டு்ம். அவர்கள் ஒரு நாளும் வருத்தமோ வெட்கமோ படமாட்டார்கள்..
எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற அரசியல் வேலைப்பாடுகளுடனேயே ஒரு பிரதமர் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தால் நாடு எப்படி வெளங்கும்..? இப்படித்தான் இருக்கும்.
ஒப்பந்தம்தான் போடப்பட்டுள்ளது. இதுவரையில் ஒப்படைக்கப்படவில்லை. ஆகவே பயப்படாதீர்கள் என்கிறார்கள் இப்போது..! இதுவரையில் இது தொடர்பாக இஸ்ரோவில் தொடர்ந்து வந்திருக்கும் வேலைகளுக்கு செய்யப்பட்டிருக்கும் செலவுகளை யார் சுமப்பதாம்..? மன்னமோகனசிங்கின் மாமனாரா..?
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அது வெறும் யூகமான ஊழல் என்றெல்லாம் கதை விட்டவர்கள்.. லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் தாங்கள் பங்கு விற்ற பணத்தினை லைசென்ஸ் கொடுத்தவர்களுக்கே திருப்பிவிட்டிருக்கும் கதையைப் படித்தவுடன் பதில் பேச தெரியாமல் இப்போது அமைதியாகிவிட்டார்கள்.
அதேபோலத்தான் தேவாஸ் நிறுவனத்தின் ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் மூலம் அந்நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் ஜெர்மனி கம்பெனியின் முதலீடும் ஒரு முறைகேடான பணம்தான். அதில் இருந்து பெருமளவு இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொடுத்தவர்களுக்கு போயிருக்கும் என்பதை இந்திய அரசியலை கூர்ந்து கவனித்து வரும் சாதா இந்தியர்களுக்கே கண்டிப்பாக புரிந்திருக்கும்..!
சி.ஏ.ஜி. சொல்லியிருப்பது, அந்த 4-ஜி அலைக்கற்றையின் இன்றைய மார்க்கெட் மதிப்பு 2 லட்சம் கோடிகளைத் தாண்டிவிடும். அதை பொதுச் சந்தையில் ஏல முறையில் விடுத்தால் இந்த அளவுக்கு பணம் இந்திய அரசுக்கும், மக்களுக்கும் கிடைக்குமே என்ற வகையில்தான் என்பது புரிகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்திருக்கும் பண ஆதாயத்தில் திளைத்துக் குளித்தது யார் என்பதை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் யாராவது மனு தொடுத்தால்தான் வெளிவரும்போல் தெரிகிறது.
ஏனெனில் இன்று நடந்திருக்கும் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் சில மந்திரிகள் இது தொடர்பாக எப்படி விற்பனை நடந்தது என்று கேட்டதற்கு பிரதமர் பதிலே பேசவில்லையாம்.. ஐயா எப்படி பேசுவார்..? அவரது நேர்மையின் சிகரம் என்ற பெயர்தான் இன்றைக்கு கோவணமாகக் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறதே. இவரது சீர்கெட்ட நிர்வாகத் திறனுக்கு இந்த 2 லட்சம் கோடி மதிப்பு வாய்ந்த மோசடியும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!
அரசியல்வியாதிகளும், ரெளடிகளும், மாபியாக்காரர்களும், கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும்தான், மோசடியான பத்திரிகையாளர்களும், நேர்மையற்ற எழுத்தாளர்களும் இந்தியாவை அழிவுப் பாதைக்குக் கொண்டு போய் கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், நமது மதிப்பிற்குரிய விஞ்ஞானிகளும் இந்த லிஸ்ட்டில் இணைந்துவிட்டார்கள் என்பதை நினைத்தால்தான் இன்னமும் வேதனையாக இருக்கிறது.
இந்தியாவில் இனிமேல் காமன்மேனுக்கு பதில் ஆறுதலை இன்னொரு காமன்மேன்தான் சொல்ல வேண்டும் போலும்..!
உதவி : பல்வேறு பத்திரிகைகள், இணையத்தளங்கள்
Posted by உண்மைத்தமிழன்
Read more: http://truetamilans.blogspot.com/2011/02/2.html#ixzz1HImFqS00
No comments:
Post a Comment